மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
42. சென்னிப்பத்து
திருப்பெருந்துறையில் அருளியது
சிவவிளைவு
அறுசீர் ஆசிரிய விருத்தம்
தேவ தேவன்மெய்ச் சேவகன்
    தென்பெ ருந்துறை நாயகன்
மூவராலும் அறியொ ணாமுத
    லாய ஆனந்த மூர்த்தியான்
யாவ ராயினும் அன்பரன்றி
    அறியொ ணாமலர்ச் சோதியான்
தூய மாமலர்ச் சேவ டிக்கண்நம்
    சென்னி மன்னிச் சுடருமே.
1
அட்ட மூர்த்தி அழகன், இன்னமு
    தாய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய்ச்சிவ லோக நாயகன்
    தென்பெருந் துறைச் சேவகன்
மட்டு வார்குழல் மங்கை யாளையோர்
    பாகம் வைத்த அழகன்தன்
வட்ட மாமலர்ச் சேவ டிக்கண்நம்
    சென்னி மன்னி மலருமே.
2
நங்கை மீரெனை நோக்குமின் நங்கள்
    நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெ ருந்துறை
    மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங் கொண்டெம்
    உயிருங் கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவ டிக்கண்நம்
    சென்னி மன்னிப் பொலியுமே.
3
பத்தர் சூழப் பராபரன்
    பாரில் வந்து பார்ப்பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான்
    தில்லை மூதூர் நடஞ்செய்வான்
எத்த னாகிவந் தில்புகுந்தெமை
    ஆளுங் கொண்டெம் பணிகொள்வான்
வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம்
    சென்னி மன்னி மலருமே.
4
மாய வாழ்க்கையை மெய்யென்
    றெண்ணி மதித்திடா வகைநல்கினான்
வேய தோளுமை பங்கன்
    எங்கள் திருப்பெருந்துறை மேவினான்
காயத் துள்ளமு தூற ஊறநீ
    கண்டு கொள்ளென்று காட்டிய
சேயமா மலர்ச்சேடிக் கண்நம்
    சென்னி மன்னித் திகழுமே.
5
சித்த மேபுகுந் தெம்மையாட்
    கொண்டு தீவினை கெடுத்துய்யலாம்
பத்தி தந்துதன் பொற்கழற்கணே
    பன்மலர் கொய்து சேர்த்தலும்
முத்தி தந்திந்த மூவுலகுக்கும்
    அப்பு றத்தெமை வைத்திடும்
அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம்
    சென்னி மன்னி மலருமே.
6
பிறவி யென்னுமிக் கடலை
    நீந்தத்தன் பேரருள் தந்தருளினான்
அறவை யென்றடி யார்கள்
    தங்களருட்கு ழாம்புக விட்டுநல்
உறவு செய்தெனை உய்யக்கொண்ட
    பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவடிக்கண்நம்
    சென்னி மன்னித் திகழுமே.
7
புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற்
    பொய்த னையொழி வித்திடும்
எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான்
    என்னுடை யப்பன் என்றென்று
தொழுத கையினராகித் தூய்மலர்க்
    கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு
வழுவி லாமலர்ச் சேவடிக்கண்நம்
    வல்வி னைப்பகை மாய்த்திடும்.
8
வம்ப னாய்த்திரி வேனை வாவென்று
    வல்வி னைப்பகை மாய்த்திடும்
உம்ப ரான்உல கூடறுத்தப்
    புறத்த னாய்நின்ற எம்பிரான்
அன்ப ரானவர்க் கருளி மெய்யடி
    யார்கட் கின்பந் தழைத்திடுஞ்
செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம்
    சென்னி மன்னித் திகழுமே.
9
முத்த னைமுதற் சோதியை
    முக்கண் அப்பனை முதல்வித்தினைச்
சித்த னைச்சிவ லோக
    னைத்திரு நாமம் பாடித்திரிதரும்
பத்தர் காள்இங்கே வம்மின்
    நீர்உங்கள் பாசந்தீரப் பணிமினோ
சித்த மார்தருஞ் சேவடிக்கண்நம்
    சென்னி மன்னித் திகழுமே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com